Home நாடு சிலுவை விவகாரம்: ஐஜிபி உடனடியாக பதவி விலக வேண்டும் – டத்தோ ஹென்ரி

சிலுவை விவகாரம்: ஐஜிபி உடனடியாக பதவி விலக வேண்டும் – டத்தோ ஹென்ரி

658
0
SHARE
Ad

Henry-Benedict-Asirvathamபட்டர்வொர்த், ஏப்ரல் 21 – தாமான் மேடானில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவைக்கு எதிராக, அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம் குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு தேவாலய நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர்.

இந்த சம்பவம் நாடெங்கிலும் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான முஸ்லிம்கள் வசித்து வரும் அப்பகுதியில் சிலுவை இருப்பது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மஇகா பாகான் தொகுதித் தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“கடந்த ஏப்ரல் 19-ம் தேதி இந்நாட்டின் வரலாற்றில் மிக இருண்ட தருணமாகப் பதிவு செய்யப்படும். பல்லாண்டு காலமாக நமது முன்னோர்கள் கட்டியெழுப்பிய இன நல்லிணக்கம் மற்றும் அன்புடைமை அன்றைய தினம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.”

“பல்லாண்டு காலமாக இந்நாட்டில் பலரும் தங்களது சுயநம்பிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு மதங்களைப் பின்பற்றி வந்ததுடன், சுய சின்னங்களையும் எந்தவிதமான சிக்கல்களும் இன்றி பயன்படுத்தி வந்துள்ளனர். ஏனெனில் மதச் சுதந்திரத்தின் புனிதம் குறித்து நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது குறித்து பல்வேறு சமூகங்களிடையே நல்ல புரிதல் இருந்தது.”

“எனவே, ஒரு குழுவின் போராட்டம் காரணமாக வலுக்கட்டாயமாக சிலுவைச் சின்னம் அகற்றப்பட்டிருக்கும் சம்பவமானது, பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு மதங்கள் கொண்ட நாடு என்று பெயரெடுத்துள்ள நமது நாட்டின் தோற்றத்தின் மீது கறைபடிய காரணமாகி விட்டது.”

“சிலுவை அகற்றப்பட்ட சம்பவத்தைக் காட்டிலும், அதை வலுக்கட்டாயமாக அகற்றக் காரணமாக இருந்த போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும், அவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயாது என்றும் ஐஜிபி விடுத்த அறிக்கைதான் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.”

ஐஜிபி பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்

“தாம் வகிக்கும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக ஐஜிபி உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவர் பதவி விலக மறுத்தால், பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஏனெனில் நேர்மைக்குறைவுடன் செயல்படும் ஒருவரை ஐஜிபி பதவியில் நீடிக்க அனுமதிப்பதும், அத்தகையவரிடம் நம் மக்களின் மத நம்பிக்கைகளை பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்படுவதையும் ஏற்க இயலாது.”

“இந்தச் சம்பவத்தில் ஐஜிபியின் மூத்த சகோதரரும், ஆளும் அம்னோவின் உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், அறிக்கை விடுப்பதற்கு முன்னால் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஐஜிபியின் அறிக்கையானது அவர் இந்தச் சம்பவத்தில் ஒருதலைப்பட்சமாகவும், கட்சி பாகுபாடுடனும் நடந்து கொள்வது தெளிவாகத் தெரிகிறது.”

எவரும் சட்டத்தை கையிலெடுப்பதை அனுமதிக்கக் கூடாது

“தேவாலயமோ அல்லது சிலுவைச் சின்னமோ இஸ்லாம் மதத்துக்கு இடையூறாக  இருப்பதாக போராட்டக்காரர்கள் நினைத்தால், தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். இதன் மூலம் ஜாக்கிம் (JAKIM) அல்லது பெட்டாலிங் ஜெயா மாநகர சபை ( MPPJ) அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றிருக்க வேண்டும்.”

“மாறாக அவர்கள் சட்டத்தை தங்கள் கையிலெடுத்துக் கொண்டு, இன்னொரு மதத்தின் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் வேளையில், அங்கு அத்துமீறி நுழைந்து கிறிஸ்தவர்களின் புனிதச்சின்னமான சிலுவையை அகற்றுமாறு வலியுறுத்தி இருக்கக் கூடாது.”

“இந்தப் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நமது முன்னோர்கள் கனவு கண்ட, தேசிய முன்னணி அரசின் உண்மையான நோக்கமும், கண்ணோட்டமும் நம் கண் முன்னே குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும். இல்லையேல் இச்சம்பவம் நாட்டின் பிற பகுதிகளிலும் எதிரொலிக்கும் வகையிலான தவறான முன்னுதாரணமாகிவிடும். தவிர மலேசியர்கள் தற்போது இனிதே அனுபவித்து வரும் இன நல்லிணக்கம் மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கும் ஊறு விளைவித்துவிடும்.”

“1எம்டிபி மற்றும் தனது தனிப்பட்ட பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், நாட்டில் தற்போது நிலவி வரும் இன மற்றும் மத விவகாரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.”

“இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் சரியான நிலைப்பாட்டை எடுத்து அதை அறிவித்த உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாகிட் ஹமிடியைப் பாராட்டுகிறேன்.”

“இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அம்னோ உறுப்பினர்களாக, தலைவர்களாக இருப்பதால், இது தொடர்பாக அழுத்தங்கள் வந்தாலும் கூட, சாகிட் ஹமிடி தனது வார்த்தையைக் காப்பாற்றுவார் என நம்புகிறோம்.”

“நடந்துள்ள இந்தச் சம்பவமும், ஐஜிபியின் போக்கும் எதிர்வரும் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல், சரவாக் சட்டமன்ற மற்றும் 14ஆவது பொதுத்தேர்தல்களில் வாக்காளர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும் என்பதை தேசிய முன்னணி தலைவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.”

– இவ்வாறு டத்தோ ஹென்ரி தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.