புதுடெல்லி, ஏப்ரல் 22 – தனியார் நிறுவனமான ‘மேக்ஸ் மொபிலிங்க்’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக டோனி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கும், ‘மேக்ஸ் மொபிலிங்க்’ நிறுவனத்திற்கும் இடையேயான விளம்பர ஒப்பந்தம் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது”.
“அந்நிறுவன தயாரிப்புகளை என் பெயரை வைத்து விளம்பரப்படுத்தியதில் எனக்கு ரூ.10 கோடி பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தம் முடிந்த பிறகும் எனது பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள்”.
“அந்த நிறுவனத்தை என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார் டோனி. இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரித்த நீதிமன்றம்,
‘மேக்ஸ் மொபிலிங்க்’ நிறுவனம் டோனியின் பெயரை விளம்பரத்தில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு ‘மேக்ஸ் மொபிலிங்க்’ நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.