புதுடெல்லி, ஏப்ரல் 22 – நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவினை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா டெல்லி மேல்சபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. நில எடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் விவசாயிகளை ஒன்று திரட்டி பொதுக்கூட்டம் நடத்தியது.
இந்தக் கூட்டத்தில், ராகுல்காந்தி, சோனியாகாந்தி உள்பட பலரும் பங்கேற்றனர். நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில் நில எடுப்பு மசோதாவுக்கு எதிராக டெல்லியில் இன்று ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார்.
இதற்காக பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, சத்தீஷ்கர், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆம் ஆத்மி தொண்டர்களும், விவசாயிகளும் ஜந்தர் மந்தர் பகுதியில் குவிந்துள்ளனர். கண்டன பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசுகிறார்.