Home உலகம் சிங்கை முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சிங்கை முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

602
0
SHARE
Ad

சிங்கப்பூர், ஏப்ரல் 22 – 90 வயதான சிங்கையின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு (படம்) கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

S.R.Nathan Singapore Presidentஇன்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், அவருக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

1999 முதல் 2011 வரை இரண்டு தவணைகள், 6வது சிங்கப்பூர் அதிபராகப் பதவி வகித்த நாதன், அந்நாட்டின் வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த அதிபராவார்.

#TamilSchoolmychoice

கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவர் அதிபராகப் பணியாற்றினார். அவருக்குப் பின் பதவியேற்ற டோனி டான் கெங் யாம் தற்போது அதிபராக இருந்து வருகின்றார்.

சிங்கை அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான தூதராகவும், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

சிங்கை அதிபர் பதவியை வகித்த இரண்டாவது இந்தியர் எஸ்.ஆர்.நாதன் ஆவார். இதற்கு முன்பு சி.வி.தேவன் நாயர் சிங்கை அதிபராகப் பதவி வகித்துள்ளார்.

அண்மையில் காலமான சிங்கையின் முன்னாள் பிரதமர் லீ குவான்  இயூவின் இறுதிச் சடங்குகளின் போது திடகாத்திரமாக காணப்பட்ட நாதன், அந்த சமயத்தில் லீ குவான் இயூவிற்காக அஞ்சலி உரையும் நிகழ்த்தினார்.

படம்: EPA