கொழும்பு, ஏப்ரல் 23 – நீண்ட நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய, அந்நாட்டின் முன்னாள் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சரும், ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்ததை அடுத்து, இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்சே கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி இருந்தார்.
பதவி ஏற்றது முதல், ராஜபக்சே ஆட்சியில் நடத்தப்பட்ட ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறிசேனா அரசு, பசில், அமைச்சர் பதவி வகித்த பொழுது பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. எனினும் அவர், அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றதால், அந்த வழக்குகள் அனைத்தும் முடங்கி இருந்தன.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த வழக்கில் பசிலுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் நாடு திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து நிதி முறைகேடுகள் விசாரணைப் பிரிவினர், நேற்று அவரைக் கைது செய்தனர்.