கோலாலம்பூர், ஏப்ரல் 23 – மக்களின் ஆறாம் விரலாகி விட்ட திறன்பேசியும், அன்றாட வாழ்வில் இணைந்து விட்ட இணையமும் தான், இன்று உலக அளவில் வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் தொழிலாகிவிட்டது. இந்த இரு துறைகளிலும் பெயர் பெற்று விளங்கும் கூகுள் தற்போது திறன்பேசிகளுக்காக ‘செல்பேசி வலையமைப்பு’ (cellular network) சேவைப் பிரிவிலும் களமிறங்கி உள்ளது.
‘ப்ராஜெக்ட் ஃபை’ (Project Fi) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை கூகுள் நேற்று அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகி உள்ள இந்த சேவை, தற்சமயம் நெக்சஸ் 6 திறன்பேசிகளுக்கு மட்டும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஸ்பிரிண்ட்’ (Sprint) மற்றும் ‘டி-மொபைல்ஸ்’ (T-Mobiles) நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால், அந்த நிறுவனங்களின் வலையமைப்பு மற்றும் ‘வை-ஃபை ஹாட்ஸ்பாட்’ (Wi-fi Hotspot)-களை நெக்சஸ் பயனர்கள் பயன்படுத்த முடியும்.
மேலும், கூகுளின் இந்த வலையமைப்பு திட்டத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால், 120 நாடுகளுக்கு ‘ரோமிங்’ (Roaming) இலவசமாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை சேவைக்கான கட்டணங்களும் மிகக் குறைவாகவே உள்ளன. அடிப்படை சேவைக்காக 20 டாலர்களும், இணையத்தை பயன்படுத்த ஒவ்வொரு ஜிகாஹெட்ஸிற்கும் 10 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், “வலையமைப்பில் எது உச்சமோ அதை தாண்டவேண்டும் என்பதே எங்களின் இலக்கு. ப்ராஜெக்ட் ஃபை மூலம் பல மில்லியன் பயனர்களை இணைக்க முடியும். நாங்கள் வழங்கும் வை-ஃபை சேவையும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.