பெய்ஜிங், ஏப்ரல் 25 – உலக அளவில் ஐந்தாவது மிகப் பெரும் திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனமாக சியாவுமி உருவாகி உள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தை இந்திய நிறுவனமாகவே மாற்ற விரும்புகிறேன் என்று அந்நிறுவனத்தின் தலைவர் லீ ஜுன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் நாளிதழ் ஒன்றிற்கு லீ ஜுன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“2015-ம் ஆண்டைப் பொருத்தவரையில் எங்களது முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. இது இனி வரும் காலங்களிலும் தொடரும். அதனால், எங்கள் நிறுவனத்தை இந்திய நிறுவனமாகவே மாற்ற விரும்புகின்றோம். அதற்காக இந்தியாவில் 2020-ம் ஆண்டிற்குள், தொழிற்சாலைகளையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றையும் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக இந்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், “2020-ம் ஆண்டுற்குள் இந்தியாவில் எங்களது இலக்குகளை அடைவதற்காக தனித்தனியான திறன்மிக்க குழுக்களை அமைத்துள்ளோம். இந்தப் பணிகள் அனைத்தும் வெகு சீக்கிரத்தில் முடியும் என எதிர்பார்க்கிறேன். எவ்வாறாயினும் எங்கள் தரத்தில் எந்த மாற்றமும் இருக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சியாவுமி ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுவது குறித்துக் கேட்டதற்கு, “அப்படிக் கூறுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆரம்பத்தில் எங்களிடம் 2300 காப்புரிமங்கள் இருந்தன. தற்போது நாங்கள் 4000 காப்புரிமங்களை நோக்கி முன்னேறி உள்ளோம். இந்த வெற்றி பலரின் தீவிர முயற்சியால் உருவானது. அதனால், எங்கள் நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்தின் நகல் என்று கூறுவதில் விரும்பமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.