கோலாலம்பூர், ஏப்ரல் 27 – பிரதமர் நஜிப் துன் ரசாக் பற்றி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பொதுவில் கடும் விமர்சனம் செய்து வருவதற்கு, முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய கட்டமைப்புத் துறையின் சிறப்புத் தூதருமான சாமிவேலு இன்று நேபாள் நிலநடுக்க நிவாரண திட்டத்தை அறிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகாதீர் நஜிப்பை விமர்சிப்பதற்கு பதிலாக அவருடன் கலந்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் மூத்த அனுபவம் வாய்ந்த தலைவராகிய மகாதீரை தான் மிகவும் மரியாதையுடன் பார்ப்பதாகக் கூறிய சாமிவேலு, நஜிப்புக்கு எதிராக அவர் கூறும் அறிக்கைகள் தேசிய முன்னணி, மஇகா மற்றும் அதனைச் சேர்ந்தவைகளை பலவீனப்படுத்திவிடும் என்பதால் அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நஜிப் தன்னுடன் பேச மறுத்துவிட்டதாக மகாதீர் கூறியுள்ளதை சுட்டிக் காட்டிய செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த சாமிவேலு, “நான் இப்போது நஜிப்புக்கு போன் செய்து 6 மணிக்கு பார்க்க வேண்டும் என்று கூறினாலும், வாருங்கள் என்பார். நஜிப் நேருக்கு நேருக்கு நின்று பேசும் ஒரு மனிதர். அவருக்கும் இதயம் இருக்கின்றது மற்றும் ஏழைகளுக்காக வருந்தும் எண்ணமும் இருக்கின்றது” என்று சாமிவேலு தெரிவித்துள்ளார்.