புதுடெல்லி, ஏப்ரல் 28 – பிரதமர் நரேந்திர மோடியை விஜயகாந்த் தலைமையிலான தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்தித்த பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது விஜயகாந்த், ‘தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து பிரதமர் பரிவுடன் கேட்டார். அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவில் ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்’ என்றார்.
அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஒன்றிணைந்து தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வந்தது ஒரு அற்புதமான தொடக்கம். இதனை யாரும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘கடந்த ஒரு மாதத்துக்குள் பிரதமர் மூன்று முறை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து இருப்பது அவர் தமிழகத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது”.
“முக்கியமாக மேகதாட்டு அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவரை சந்திக்க நேரம் கேட்டும் அவர்களுக்கு நேரம் ஒதுக்காதது முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்’’ என்றார்.
தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு இன்னும் விரைந்து செயல்பட வேண்டும். மாநிலத்தின் பிரச்சனைக்காக ஒன்றிணைந்தது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை இந்தக் குழுவில் பெரும்பாலானோர் எதிர்ப்பதால் அதுகுறித்து பிரதமரிடம் நாங்கள் எதுவும் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, நா.செ.ராமச்சந்திரன் ஆகியோர் கூறினார்கள்.
நாங்கள் முன்வைத்த பிரச்சனைகளை பிரதமர் அக்கறையுடன் கேட்க முன்வந்ததே மிகவும் முக்கியமான விஷயம். ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பலவற்றை அவர் கேட்டு அறிந்தார் என்று பாரிவேந்தர் கூறினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேட்டியின்போது, ஒரு தொலைக்காட்சி நிருபர் தமிழக அரசியல் குறித்து கேள்வி எழுப்பினார். இதைக்கேட்ட விஜயகாந்த் ஆவேசம் அடைந்தார். அப்போது திடீரென அவர் பேட்டியை முடிக்காமல் பாதியிலேயே கோபமாக எழுந்து சென்றார்.
உடனே மற்ற தலைவர்கள் சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து அமரச் செய்தனர். அதன் பின்னரும் சில கேள்விகளுக்கு அவர் ஆவேசப்பட்டபோது, அருகில் உட்கார்ந்து இருந்த திருச்சி சிவா அவரது கையை பிடித்து அமைதிப்படுத்தினார். இதனால் பேட்டியின்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.