Home உலகம் இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கல் – ராஜபக்சே கட்சியினர் கடும் எதிர்ப்பு!

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கல் – ராஜபக்சே கட்சியினர் கடும் எதிர்ப்பு!

485
0
SHARE
Ad

sirisena01கொழும்பு, ஏப்ரல் 28 – இலங்கை அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 19-ஏ சட்டத் திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபர் சிறிசேனா நேற்று தாக்கல் செய்தார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கட்சியினரும் அவரது ஆதரவாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏனெனில் இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது அதிபர் பதவிக்கு அதிகபட்ச அதிகாரத்தை அவரே வழங்கிக் கொண்டார். இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை அதிபருக்கு உள்ள பல முக்கிய அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதே இந்த 19-ஏ அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் ஆட்சியில் அதிபருக்கு உள்ள அதிகாரப்பிடி தளரும்.

#TamilSchoolmychoice

மசோதாவை தாக்கல் செய்து பேசிய சிறிசேனா; “அதிபர் பதவிக்கு உள்ள எல்லையில்லா அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நீங்கள் அனைவருமே இதற்கு உடன்பட்டால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருந்தனர். இந்த மசோதா மூலம் சிறப்பான நிர்வாகத்துக்கான பல்வேறு ஆணையங்களை அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ராஜபக்சே கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே இம்மசோதா நிறைவேற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தைக் கொடுக்கும் முயற்சியால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் கிடைத்துவிடப் போவதில்லை.

ஏனென்றால், இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழர்களுக்கு எந்தவித உரிமையும், அதிகாரப் பகிர்வும் கிடைத்து விடக்கூடாது என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

தமிழ் மக்கள் நடத்தும் அறவழிப் போராட்டங்கள் வழியே, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தாலொழிய, இப்படியான அதிபருக்கான அதிகாரக் குறைப்பு போன்ற செயல்களால் தமிழர் வாழ்வில் எந்த முன்னேற்றமான மாற்றமும் நிகழ்ந்துவிடாது என்பதே உண்மை நிலையாகும் என ஈழத் தமிழ் கட்சியினர் தெரிவித்தனர்.