சென்னை, ஏப்ரல் 28 – தமிழ் சினிமாவில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் நடிகர் விவேக், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய நகைச்சுவையில் பெரும்பாலும் சமூக சீர்திருத்த கருத்துக்கள் உள்ளடங்கியிருக்கும்.
அந்த நகைச்சுவைகள் சினிமா ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும். இவருடைய நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு பல படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.
தமிழ் திரைப்படத்துறை வரலாற்றிலேயே நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்வதில் விவேக் வல்லவர். தமிழ் திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.
விவேக் நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்டவர். தற்போது தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கையிலெடுத்து முன்னின்று நடத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூக கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சுமார் 25 ஆண்டுக்ளுக்கும் மேலாக சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டி வரும் விவேக்கிற்கு தற்போது மேலும் மணிமகுடம் கிடைத்துள்ளது.
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழா நேற்று சென்னைக்கு அருகில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
ஏற்கெனவே, சத்யபாமா பல்கலைக்கழகம், இயக்குனர் ஷங்கர், மற்றும் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.