கோலாலம்பூர், ஏப்ரல் 28 – இன்று மதியம் நேபாளத் தலைநகர் காட்மண்டு திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மலேசிய வான்படை (RMF) விமானம் சி-130, அங்கிருந்த 102 மலேசியர்களை மீட்டுக் கொண்டு தாயகம் திரும்புகின்றது.
தற்போது இந்தியாவின் கொல்கத்தாவை அடைந்துள்ள அவ்விமானம் இன்று இரவு சுபாங் விமான நிலையத்தை வந்தடையும் என மலேசிய வான்படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சீ அக்மார் முகமட் நோர் தெரிவித்துள்ளார்.
இதுவரை தங்களுக்கு அடுத்த பயணம் பற்றிய உத்தரவு இல்லை என்று குறிப்பிட்ட அவர், நேபாளில் உள்ள மலேசியர்களை அழைத்துக் கொண்டு வருவதாக இருந்தாலோ அல்லது பொருட்களை இங்கிருந்து கொண்டு செல்லவதாக இருந்தாலோ அடுத்த பயணத்தை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் அந்த நாடே உருக்குலைந்து போனது. தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 10,000 -த்தை எட்டும் என்று கூறப்படுகின்றது.
இந்த பேரிடரில் சுற்றுலா சென்றிருந்த மலேசியர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர்களை தற்போது மலேசியா அரசாங்கம் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.