கான்பரா, ஏப்ரல் 29 – பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது தொடர்பான அறிவிப்பினை ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்தோனேசியாவின் சட்ட முறைகளை ஆஸ்திரேலியா மதிக்கின்றது. நாங்கள் அவர்களின் இறையாண்மையை மரியாதை செய்கின்றோம். ஆனால் நடைபெற்ற சம்பவம் எங்களை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனை எங்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த சில மணிநேரங்களில் நடந்து முடிந்த சம்பவம், ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமான நல்லுறவை கடுமையாக பாதித்துள்ளது. இது இரு நாட்டு உறவில் கருப்பு நாள்”
“மரண தண்டனை பற்றியும், போதைப்பொருள் குற்றங்கள் பற்றியும் மக்கள் பலவாறாக நினைக்கலாம். ஆனால், இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினரின் வலி யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆஸ்திரேலியர்களின் பிரார்த்தனையும் அவர்களுக்காக என்றும் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகையில், “இரண்டு ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டதற்கான விளைவுகளை இந்தோனேசியா கட்டாயம் சந்திக்கும். இந்தோனேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பால் க்ரிக்சன் இன்று நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார்.