புத்ரா ஜெயா, ஏப்ரல் 30 – சுங்கை பூலோ மற்றும் புத்ராஜெயாவை இணைக்கும் விரைவு இரயில் சேவையின் இரண்டாம் தடம் அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகும் என எம்.ஆர்.டி நிறுவனம் (Mass Rapid Transit Corp Sdn Bhd) அறிவித்துள்ளது.
இது குறித்து எம்.ஆர்.டி நிறுவனத்தின் திட்டப்பணிகளுக்கான இயக்குனர் மஹ்மூத் ரசாக் கூறுகையில், “சுங்கை பூலோவிலிருந்து புத்ராஜெயாவை, செர்டாங் வழியாக இணைக்கும் இரயில் பாதையின் மொத்த தூரம் 52.2 கி.மீ ஆகும். இதற்கான தடம் அமைக்கும் பணிகள் முடிய 5 ஆண்டுகள் ஆகும். அடுத்த வருடம் ஜூன் மாதம் முதல் இதற்கான தொடக்கப் பணிகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம்.”
“இந்த இரயில் பாதை அமைக்கப்பட்டால், சுங்கை பூலோவிலிருந்து புத்ராஜெயாவை 84 நிமிடங்களில் அடைந்து விடலாம். மேலும் இரயில், குறிப்பிட்ட அந்த பாதையில் 36 நிலையங்களைக் கடக்க வேண்டி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த இரயில் பாதை அமைக்க இருப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டை பொது மக்களுக்கு எதிர்வரும் மே 19-ம் தேதி வரை காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அது தொடர்பான மதிப்பாய்வுகள் ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.