மணிலா, ஏப்ரல் 30 – இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த கடைசி தருணத்தில் பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் வெலொசோ, அத்தண்டனையில் இருந்து தப்பியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அவரிடம் 2.6 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படும் மரியா கிரிஸ்டினா செர்ஜியோ என்ற பெண்மணி திடீரென ஃபிலிப்பைன்ஸ் காவல்துறையில் அடைக்கலம் கோரியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று மணிலாவில் இருந்து 120 கிலோமீட்டர் தூரமுள்ள கபனாடுவான் நகர போலீசாரிடம் சரணடைந்த அவர், தனக்கு செல்பேசி வழியும், நட்பு ஊடகங்கள் வழியும் கொலை மிரட்டல்கள் வருவதாக கூறியுள்ளார்.
47 வயதான மரியா கிரிஸ்டினா, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மேரி ஜேனின் வளர்ப்புப் பெற்றோரின் மகள்களில் ஒருவர் ஆவார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, மலேசியாவில் பணிப்பெண் வேலை இருப்பதாக மேரி ஜேனிடம் கூறிய மரியா, அவருக்கு 1600 வெள்ளியும், ஒரு செல்பேசி மற்றும் மோட்டார் சைக்கிளையும் பரிசாக அளித்துள்ளார்.
அவரது பேச்சை நம்பிய மேரி ஜேன், மரியாவுடன் 2010, ஏப்ரல் 22ஆம் தேதி மலேசியா வந்துள்ளார். இந்நிலையில் மலேசியப் பணிப்பெண் வேலை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், எனவே இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைப்பதாகவும் மேரி ஜேனிடம் கூறியுள்ளார் மரியா.
இருவரும் கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 3 நாட்கள் தங்கியுள்ளனர். இதன் பின்னர் பெட்டாலிங் ஜெயா சென்று அங்கு ஒரு ஆப்பிரிக்க நாட்டவர் உட்பட இருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் மரியா. இதையடுத்து புதிய பை ஒன்றும், சில துணிமணிகளையும் வாங்கிய மரியா, அவற்றுடன் 500 அமெரிக்க டாலரையும் சேர்த்து மேரி ஜேனிடம் கொடுத்துள்ளார்.
புதிதாக வாங்கப்பட்ட பை, ஏன் கனமாக இருக்கிறது? என்று மேரி கேட்டபோது, ஏதேதோ கூறி மரியா சமாளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஏப்ரல் 25ஆம் தேதி இருவரும் இந்தோனேசியாவின் யோக்யாகர்டா விமான நிலையம் சென்றடைந்தனர். அங்கு பயணிகளின் உடைமை சோதனை செய்யப்பட்டபோது மேரி ஜேன் கொண்டு சென்ற பை அதிகாரிகளிடம் சிக்கியது. அந்த பையை சோதித்தபோது அபாய ஒலி எழுந்ததால் அதிகாரிகள் பிரித்துப் பார்க்க, 2.6 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது.
தன் மீது தவறல்ல என்பதால், மரியா இருக்கும் திசையை மேரி ஜேன் நோக்கியபோது, அவர் மாயமாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தற்போது மனிதக் கடத்தல் உள்ளிட்ட சில புகார்களின் பேரில் ஃபிலிப்பைன்ஸ் காவல்துறை மரியா செர்ஜியோவை விசாரித்து வருகிறது. அவருடன் ஆப்பிரிக்க ஐக் மற்றும் ஜூலியஸ் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை முடிவிலேயே மேரி ஜேனுக்கு விடுதலை கிடைக்குமா என்பது தெரிய வரும்.