காட்மாண்டு, ஏப்ரல் 30 – நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை 22 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப் போட்டது. பல ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்கப்பட்டவர்கள் மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர், இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளின் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காட்மாண்டுவின் பக்தாபூரில் கட்ட இடிபாடுகளில் நேபாள இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. சத்தம் வந்த இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் அங்கு 4 மாத கைக்குழந்தை ஒன்று புழுதிகளுக்கு நடுவே கிடைப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக இடிபாடுகளை அகற்றிய அவர்கள், குழந்தையை மீட்டு அருகில் இருந்து மருத்துவ முகாமில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிய சிராய்ப்புகளை தவிர உடலில் எவ்வித உள்காயங்களும் இன்றி குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்ததால் மீட்புக் குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுமார் 22 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்தக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை நேபாள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாகி உள்ளது.