மதம், இனம், சமூக ரீதியிலான எந்தவித பாகுபாட்டையும் எனது தலைமையிலான அரசு அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “டைம்’ பத்திரிகைக்கு பிரதமர் மோடி, சமீபத்தில் பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது: “இந்தியாவில், சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த விவகாரத்தில் கற்பனையான அச்சத்துக்கு இடமில்லை”.
“சிறுபான்மை சமூகத்தைக் குறித்து பாஜக தலைவர்கள் யாரேனும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தால், அதை நாங்கள் உடனடியாக நிராகரித்திருக்கிறோம்”.
“பாஜகவையும், எனது அரசையும் பொறுத்தவரை நாங்கள் கடைபிடிக்கும் ஒரே புனித நூல், இந்தியாவின் அரசியல் சாசனமாகும்”.
“சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில், இந்தியா இதுவரை எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்பதும் மதம், இன ரீதியாகவும் போர் தொடுத்ததில்லை என்பதும் புலனாகும்”.
“அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்வது என்பது எங்களுடைய ரத்தத்தில் கலந்துள்ளது. அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பது எங்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது.”
“இந்து மதத்தைப் பொறுத்தவரை அது பரந்த பன்முகத்தன்மை கொண்ட மதமாகும். உதாரணமாக, விக்கிரக வழிபாடு செய்பவர் இந்துவாக இருப்பார். விக்கிரக வழிபாட்டை வெறுப்பவரும் இந்துவாக இருக்க முடியும்”.
“இந்து மதம் குறித்து உச்ச நீதிமன்றம் மிகச் சிறந்த விளக்கத்தை அளித்துள்ளது. இந்துயிஸம் என்பது மதமல்ல. அது வாழ்க்கைக்கான நெறிமுறை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது”.
“மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பின்பு, இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்கிறது. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு அவசியமில்லை. இந்தியாவை வழிநடத்துவதற்கு சர்வாதிகாரியோ, சக்தி வாய்ந்த மனிதரோ தேவையில்லை”.
“சர்வாதிகாரமா, ஜனநாயகமா என்னும் கேள்வியெழும்போது, நான் ஜனநாயகத்தைதான் தேர்வு செய்வேன் என்று “டைம்’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார் மோடி தெரிவித்துள்ளார்.