Home உலகம் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: தலிபான்கள் பொறுப்பேற்பு!

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: தலிபான்கள் பொறுப்பேற்பு!

392
0
SHARE
Ad

helicaptorஇஸ்லாமாபாத், மே 8 –  பாகிஸ்தான் கில்கிட் பகுதியில் இன்று இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் இயக்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நார்வே, பிலிப்பைன்ஸ், போலந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் தூதர்கள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த சிலரும் இன்று இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் கில்கிட்-பால்டிஸ்தான் வட்டாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் நல்தார் பள்ளத்தாக்கிற்கு அருகே சென்ற பொழுது ஒரு பள்ளிக் கட்டிடம் மீது விழுந்து விபத்திற்குள்ளானதாகக் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த விபத்தில் பாகிஸ்தானுக்கான நார்வே தூதர் லீப் ஹெச் லார்சன், பிலிப்பைன்ஸ் தூதர் டோமிங்கோ டி லூசினாரியோ ஜூனியர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தூதர்களின் மனைவிகள், இரண்டு ராணுவ விமானிகள் என மொத்தம் 6 பேர் பலியாகினர். போலந்து மற்றும் நெதர்லாந்து தூதர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தாங்கள் நடத்திய சிறிய ரக ஏவுகணை தாக்குதல் தான் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், தாங்கள் அந்த ஹெலிகாப்டரில் நவாஸ் ஷெரீப் இருப்பார் என்று எதிர்பார்த்ததாகவும் கூறியுள்ளனர்.

பன்னாட்டு தூதர்கள் பலியான இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தலிபான்களின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.