பெங்களூரு, மே 9 – தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் பி.ஏ.பாட்டீல் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. வழக்கு ஆரம்பித்த 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணையை முடித்த நீதிபதி மார்ச் 12-ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியைத் தொடங்கினார். அதுமுதல் தீர்ப்பு எப்பொழுது என்ற பரபரப்பு கிளம்பியது.
இதற்கிடையே, பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது என திமுக தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றமும், பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது என அறிவித்தது. மேலும், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது பவானிசிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தது.
அதன்படி, நீதிபதி குமாரசாமி மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுதும் பணியைத் தொடங்கினார். தற்போது, தீர்ப்பு எழுதும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், நீதிபதி குமாரசாமி நேற்று காலை, இது குறித்த தகவலை நீதிமன்ற பதிவாளருக்கு தெரிவிப்பார் என்றும், அதனை தொடர்ந்து பதிவாளர் தீர்ப்பு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.
அந்த தகவலின் படி, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்.