கொழும்பு, மே 11 – இலங்கை அதிபரின் பாதுகாவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவத்தினர் அடங்கிய பிரிவைக் கலைத்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டார்.
அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கைத் துப்பாக்கியுடன் ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கையை அதிபர் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதையடுத்து, அந்த நாட்டு ராணுவத்துக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வழங்கிய சலுகைகளை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், இலங்கை ராணுவத்தினர் பலர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தற்போதைய அதிபர் சிறிசேனா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தார்.
சிறீசேனாவை சுடக் கூடிய தூரம் வரை முன்னேறிய அந்த ராணுவ அதிகாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த நிலையில், ராஜபக்சே ஆட்சியின்போது அதிபரின் பாதுகாப்புப் பணியில் இணைக்கப்பட்ட ராணுவப் பிரிவைக் கலைத்து சிறீசேனா உத்தரவிட்டார். இனி அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் காவல்துறையே கவனித்துக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.