சென்னை, மே 11 – தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரைப்படங்கள் ‘‘கியூப், யு.எப்.ஓ’’ என்ற டிஜிட்டல் நிறுவனங்கள் மூலம் திரையிடப்படுகின்றன. இதற்காக இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கின்றன. இந்த கட்டண தொகை அதிகமாக இருப்பதாக தமிழ் திரைப்பட சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதிக கட்டணத்தை இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிப்பதை கண்டித்தும், விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்கள் வசூலித்த ரூ.400 கோடி பங்கு தொகையை வழங்க வலியுறுத்தியும், இரு டிஜிட்டல் நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்தக்கோரியும் திரை உலகம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் நேற்று திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். நுங்கம்பாக்கம் வள்ளூவர் கோட்டம் அருகில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதற்காக அங்கு விசேஷ சாமியானா பந்தல் போடப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது.
சுற்றிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாதைகள் வைத்து இருந்தனர். காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவர் நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
நடிகர்கள் விஜயகுமார், விவேக், சரவணன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், செயலா ளர்கள் டி.சிவா, ராதா கிருஷ்ணன், டைரக்டர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி,
டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், இயக்குநர்கள் மனோஜ்குமார், ரமேஷ்செல்வன், வி.சேகர், தயாரிப்பாளர்கள் இப்ராகிம் ராவுத்தர், சிவசக்தி பாண்டியன், அழகன் தமிழ்மணி, ருங்மாங்கதன், சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.