கோலாலம்பூர், மே 11 – கடந்த சனிக்கிழமை ஸ்பெயின் நாட்டிலுள்ள செவில் நகரில் A400M (ஏ400எம்) இரக இராணுவ விமானம் சோதனை முயற்சியின் போது விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, மலேசியாவில் செயல்பாட்டில் இருக்கும் அதே A400M இரக விமானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் ஹூசைன், விபத்து குறித்து மேல் விபரங்கள் அறியும் வரை மலேசியாவில் செயல்பாட்டில் இருக்கும் A400M இரக இராணுவ விமானம் இயக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.
A400M ரக இராணுவ விமானம் ஐரோப்பிய நாடுகளின் தேவைகளுக்காக, உருவாக்கப்பட்ட, அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் ஆற்றல் பெற்ற விமானமாகும்.
இந்த விமானம் ஆறு நாடுகளின் கூட்டு முயற்சியில், 20 பில்லியன் ஈரோஸ் (ஐரோப்பிய டாலர்) முதலீட்டில் இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் விமானமாகும்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சோதனை முயற்சியின் போது அவ்விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் மரணமடைந்துள்ளதால், மலேசியா, ஜெர்மன், பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்கள் படைகளையும், விமானங்களையும் தரையிறங்க உத்தரவிட்டுள்ளன.
கடந்த 2005 -ம் ஆண்டு, நான்கு A400M இரக இராணுவ விமானங்களை வாங்க மலேசியா ஒப்பந்தம் செய்திருந்தது. அதில் ஒரு விமானத்தை கடந்த மார்ச் 9-ம் தேதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் இரண்டு விமானங்களையும், அடுத்த ஆண்டு மற்றொரு விமானத்தையும் பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.