சென்னை, மே 11 – சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சரத்குமார், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிக்கப்பட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் அவரின் தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தீர்ப்பின் முழு விவரம் வந்தபிறகே கருத்து கூற முடியும் என்று திமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், “சட்டத்தை மதித்து அமைதியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. இவ்வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதன் மூலம் தர்மம் வென்றுள்ளது. மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை” என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், “சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மதிக்கிறோம். தீர்ப்பை அரசியலாக்கக் கூடாது. தீர்ப்பாகவே பார்க்கிறோம்” என்று கூறினார்.
எதிர்பார்த்ததை விட வேறு மாதிரி தீர்ப்பு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறினார்.