கோத்தபாரு, மே 12 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு, பின்னர் கொல்லப்பட்ட 11 மலேசியர்களில், 6 பேர் மனித வெடிகுண்டாக (தற்கொலை படையினராக) செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 11 பேரும் சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகளாக செயல்பட்டது, இதுவரை கிடைத்த தகவல்களின் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவின் மூத்த துணை ஆணையர் டத்தோ அயூப் கான் மரியம் பிச்சை தெரிவித்தார்.
இந்தப் போராளிகள் வித்தியாசமான போர் முறையைக் கொண்டிருந்ததாகவும்,
மனிதவெடிகுண்டாக தங்களைக் கருதாமல், தாங்கள் வீரமரணம் அடையப் போவதாகக்
கருதியதாகவும் அவர் கூறினார்.
“தங்களது செயலை நியாயப்படுத்தவே வீரமரணம், உயிர்த்தியாகம் என அவர்கள்
கூறுகின்றனர். அவர்கள் மதத்தையும் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர்.
“இத்தகைய போரில் ஈடுபடுபவர்கள் வீரமணத்தை தழுவுவர் என்று அவர்கள்
பின்பற்றும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்தே அவர்கள்
மதத்தையும் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது,” என்றார் அயூப் கான்.
11 மலேசியர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுடைய உடல்களை
மலேசியா கொண்டு வர இயலாது என்று அவர் கூறினார்.
“நம்மிடம் உள்ள தகவல்களை உறுதி செய்ய ஈராக்கில் யாருமில்லை. தற்போது வரை
கிடைத்த தகவல்களின்படி இறந்த மலேசியர்கள் அனைவருமே ஆடவர்கள். பெண்
போராளிகள் யாருமில்லை,” என்று அயூப் கான் மேலும் தெரிவித்தார்.