சென்னை, மே 14 – தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில்; “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது.”
“உச்சநீதிமன்ற நீதி அரசர்களால் பெரிதும் நம்பப்பட்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி குமாரசாமி கணக்கீடுகளில் தவறு செய்திருக்கிறார் என்பது தற்செயலாக நடந்த நிகழ்வாக தெரியவில்லை. மாறாக ஏதோ ஒரு அழுத்தத்தில்தான் இது நடந்திருப்பதாக யூகிக்கமுடிகிறது”.
“ஜெயலலிதா அதிகார பலமும், பணபலமும் இருக்கின்ற மமதையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பது இது போன்ற தருணங்களில் தான் நிரூபிக்கப்படுகிறது”.
“ஜெயலலிதாவிற்கு எதிரான இந்த வழக்கில் 18 ஆண்டுகள் முடிவில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா ஆதார ஆவணங்களை, அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளார்”.
“அதனால் தான் அவரை நீதியரசர் என்று சொல்கிறோம். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எதன் அடிப்படையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்துள்ளார்? இவரை நீதியரசர் என சொல்ல முடியுமா? இது நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதென மக்கள் பேசுகிறார்கள்”.
“எனவே, கர்நாடக அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தேமுதிக மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய்காந்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.