சென்னை, மே 14 – ”மனித வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அரசியலுக்கும் வரலாம். பொறுத்திருந்து பாருங்கள்,” என, நடிகர் வடிவேலு கூறிஉள்ளார். நடிகர் வடிவேலு – சதா நடிக்க, யுவராஜ் தயாளன் இயக்கத்தில், ‘எலி’ படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது: “எலி படம் பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1960 – 1970 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பது போல திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது”.
“ஏராளமான, வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும். இம்மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். அரசியலுக்கு வருவீங்களா?’ என, கேட்கிறீர்கள். மனித வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்”.
“இந்த படம் தாமதமாக வந்ததற்கு வேறு ஏந்த காரணமும் இல்லை. மிரட்டலும் இல்லை. ‘எலி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பல படங்களில் நடிக்க அழைப்புகள் வந்தன. இப்போதைய சினிமா சூழ்நிலையில் படம் ஓடாவிட்டால் நகைச்சுவை எடுபடாமல் போயிடும்”.
“நகைச்சுவை மட்டுமே உள்ள படங்களில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன். நான் நாயகனாக நடிக்க, 10 கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். சினிமா நிலவரத்தை கவனித்து அடுத்த முடிவு எடுப்பேன். அரசியல் படத்திலும் நடிப்பேன்” என வடிவேலு கூறினார்.