கோலாலம்பூர், மே 15 – கோலாலம்பூரில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தண்ணீர் தொட்டியில் நடுத்தர வயது ஆண் சடலம் ஒன்று 5 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. 5 நாட்களாக அந்த தண்ணீர் தொட்டியைப் பயன்படுத்திய அடுக்குமாடி வாசிகளுக்கு இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புக்கிட் டாமன்சாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 200 குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த 7-ம் தேதி முதல் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கெட்ட வாடை வருவதாக புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டி திறந்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர் 43-வயதான சுவான் வான் சோய் என்றும், அவர் அந்த குடியிருப்பு வாசி இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், சுவான் வான் சோயை காணவில்லை என்று அவரது சகோதரர் கடந்த 9-ம் தேதி புகார் அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். .
இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு வாசியான அப்பாஸ் என்பவர் கூறுகையில், “கடந்த 5 நாட்களாக நாங்கள் அந்த தண்ணீரைத் தான் எங்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தோம். நேற்று முன்தினம் தான், தொட்டியில் ஆண் பிணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.