சுபாங், மே 17 – மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துன் மகாதீர் தம்பதியரை வரவேற்க சுபாங் விமான நிலையத்தில் பெர்காசா மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர்.
இதன்மூலம், மகாதீர்-நஜிப் இடையிலான அரசியல் போராட்டத்தில் மிக முக்கியமான மலாய் சமூக இயக்கமான பெர்காசா மகாதீர் பக்கம் சாய்ந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
(மகாதீர் – கோப்பு படம்)
பெர்காசாவைப் பின்பற்றி பல அரசு சார்பற்ற இயக்கங்களும் மகாதீரை வரவேற்கத் திரண்டதில் இருந்து, இத்தகைய இயக்கங்களும் மகாதீர்-நஜிப் போராட்டத்தில் அணிபிரியத் தொடங்கியுள்ளன என்பது நன்கு தெரிகின்றது.
மகாதீர் தம்பதியர் பயணம் செய்த தனி ஜெட் விமானம் வெள்ளிக்கிழமை மாலை 3.50 மணியளவில் சுபாங் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பதவி விலக வேண்டும்
என துன் மகாதீர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கான
தங்களது ஆதரவைப் புலப்படுத்தும் விதமாக ஏராளமானோர் விமான நிலையம்
வந்திருந்தனர்.
இவர்களில் முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் உள்ளிட்ட பல தலைவர்களும் அடங்குவர்.
கடந்த 10ஆம் தேதியன்று மெக்காவுக்கு தனது மனைவியுடன் உம்ரா (umrah) பயணம் மேற்கொண்டிருந்தார் துன் மகாதீர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர், தன்னை வரவேற்கக் கூடியிருந்தவர்களைக் கண்டதும் காரிலிருந்து இறங்கி அவர்களுடன் சிறிது நேரம் பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹாசான் சைட் அலி, பிரதமர் நஜிப் பதவி விலக அழுத்தம் கொடுப்பதற்காக தாங்கள்
கூடவில்லை என்றார்.
கடந்த 2008ஆம் ஆண்டு துன் மகாதீர் மெக்கா சென்று வந்தபோதும் இவ்வாறு
வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்களிலேயே அப்போதைய பிரதமர்
துன் அப்துல்லா படாவி பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதேபோன்ற சம்பவம் மீண்டும் நிகழக் கூடாது என்பதே எங்கள் விருப்பம்.
வாய்ப்பிருந்தால் அனைத்தும் சுமுகமாக வேண்டுமென நினைக்கிறோம். நாங்கள்
பெரிதும் மதிக்கும் தலைவரை வரவேற்கவே வந்துள்ளோம். மற்றபடி பழைய
சம்பவத்தை மீண்டும் அரங்கேற்றும் நோக்கம் எதுவும் இல்லை,” என்றார் சைட்
ஹாசான்.