Home அவசியம் படிக்க வேண்டியவை புதிய கட்சி தொடங்கினார் முன்னாள் அமைச்சர் அப்துல் காதிர் – துங்கு ரசாலி பின்னணியா?

புதிய கட்சி தொடங்கினார் முன்னாள் அமைச்சர் அப்துல் காதிர் – துங்கு ரசாலி பின்னணியா?

593
0
SHARE
Ad

ஸ்ரீ கெம்பாங்கான், மே 17 – பல்வேறு இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் விதமாகப் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார் சுற்றுலா மற்றும் தகவல் அமைச்சின் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் காதிர் ஷேக் ஃபட்சிர் (படம்).

Kadir Sheik Fadzirதன் கட்சிக்கு ‘பார்ட்டி இக்காத்தான் பங்சா மலேசியா’ (Parti Ikatan Bangsa Malaysia (Ikatan) என அவர் பெயரிட்டுள்ளார். தனது கட்சி ஆளும் தரப்புக்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ ஆதரவானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட முன்னோடித் தலைவர்களான துங்கு அப்துல் ரகுமான், துன் டான் செங் லோக், துன் டாக்டர் இஸ்மாயில், துன் சம்பந்தன் ஆகியோரின் ஆன்மாக்களுடன் மட்டுமே தன் கட்சி இணைந்துள்ளது என்றார்.

“நாடு இன்றுள்ள நிலையைக் கண்டு இந்தத் தலைவர்கள் அனைவரும் தங்களது
கல்லறையில் இருந்தபடி கண்ணீர் வடிக்கிறார்கள். தற்போதுள்ள ஆட்சியாளர்கள்
57 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகிறார்கள். தொடக்க காலத்தில்
ஜனநாயக கோட்பாடுகளும் மனித உரிமைகளும் அழகாகச் செதுக்கப்பட்டன. ஆனால்
தற்போது அவை சீரழிக்கப்படுகின்றன” என்றும் காதிர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“எந்தவொரு நாடும் 30 ஆண்டுகளுக்கு மேல் ஒரே தலைமைத்துவத்தின் கீழ்
இருப்பின் அது சரிவைச் சந்திக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது,”
என்று அப்துல் காதிர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சிக்காக இந்தத் தேசத்தின் தந்தைகள் (founding fathers)
பலமான அடித்தளம் அமைத்ததாகக் குறிப்பிட்ட அவர், அதிகார துஷ்பிரயோகம்,
பேராசை, பொறாமை, அராஜகம் ஆகியவை காரணமாக மலேசியா தனது முழு வளர்ச்சியை எட்டிப்பிடிக்கவில்லை என்றார்.

“மலேசியா அதிக வருமானம் உள்ள வளர்ச்சி அடைந்த நாடாக எப்போதோ மாறியிருக்க
வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு நேர்மாறான நிலையே ஏற்பட்டுள்ளது.
நாடும் மக்களும் பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், இத்தகைய
நிலை மாறவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவுமே புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது”  என்று அப்துல் காதிர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் நிதியமைச்சரும், குவா மூசாங் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சாவுக்கு நெருங்கிய அரசியல் சகாவாகக் கருதப்படுபவர் அப்துல் காதிர். இதனால், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதன் பின்னணியில் துங்கு ரசாலி செயல்படுகின்றார் என்ற ஆரூடமும் எழுந்துள்ளது.

அம்னோவில் கூடிய விரைவில் தலைமைத்துவப் போராட்டம் வெடிக்கும் எனக் கருதப்படுகின்றது. சுமுகமான தலைமைத்துவ மாற்றம் ஏற்படாவிட்டால், அம்னோ அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், துங்கு ரசாலி தலைமையில் பிரிந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகுமேயானால், அவர்களின் அரசியல் புகலிடமாக இந்த இக்காத்தான் கட்சி திகழும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.