கோலாலம்பூர், மே 17 – நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதாக துன் மகாதீரிடம் தாம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் முலியா தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற அமர்வுகளின்போது முக்கியமான விவகாரங்கள் புறக்கணிக்கப்பட்டு சில்லறை விவகாரங்கள் பெரிதாக விவாதிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் தனது விரக்தியை மட்டும் முன்னாள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஆனால் நான் பதவி விலகப் போவதாக எப்போதுமே கூறியது இல்லை,” என்றார் பண்டிகார்.
அதே வேளையில் நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் துன் மகாதீரை தாம்
சந்தித்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
“அவரை (மகாதீர்) மதிக்கிறேன். அதேசமயம் எனது பதவியை நான் ராஜினாமா
செய்யவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (நாளை) திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பேன்,” என்று செய்தியாளர்களிடம் பண்டிகார்
திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே சபாநாயகர் பதவியில் இருந்து விலக விரும்புவதாகக் குறிப்பிட்டு
பிரதமர் நஜிப்புக்கு கடிதம் ஏதும் அனுப்பினீர்களா? என்று எழுப்பப்பட்ட
கேள்விக்கு, பதில் அளிக்க பண்டிகார் மறுத்துவிட்டார்.
“அவ்வாறு ஏதேனும் கடிதம் அனுப்பியிருந்தால் அது எனக்கும் பிரதமருக்கும்
இடையே உள்ள விஷயம். அது குறித்து பிறர் கவலைப்பட ஒன்றும் இல்லை,” என்று
அவர் மேலும் கூறினார்.