சென்னை, மே 18 – தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் கூடிய விரைவில் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், நேற்று, சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த வெற்றிவேல், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அவர் தனது எம்எல்ஏ பதவியை நேற்று மாலை ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவி விலகலை சட்டப் பேரவைத் தலைவர் தனபால் ஏற்றுக்கொண்டதாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். தொகுதி காலியாக உள்ளது என்று அரசு இதழிலும் உடனே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடலாம் என்ற தகவல் பரபரப்பாக பரவி வருகின்றது.
பாரம்பரியமாக அதிமுக முதல்வர்களாக இருந்த எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எப்போதும் சென்னைக்கு வெளியேதான், குறிப்பாக கிராமப்புறத் தொகுதிகளில்தான் போட்டியிட்டு வென்று வந்துள்ளனர்.
காரணம், சென்னை எப்போதும் திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது.
ஆனால், இன்றைய சூழ்நிலையில், அதுவும் அடுத்த ஆண்டுக்குள் தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் வேளையில் சென்னையில் போட்டியிட்டு, இடைத் தேர்தலில் வெல்வதன் மூலம் திமுகவிற்கு பின்னடைவையும், சோர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதும் அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டோடச் செய்யவேண்டும் என்பதும்தான் ஜெயலலிதாவின் வியூகம் என தமிழக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், சென்னை என்பது திமுகவின் கோட்டை என்ற தோற்றம் மாயையானது என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையிலேயே போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் என்றும் தெரிகின்றது.