கோலாலம்பூர், மே 18 – தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெருகி வரும் அகதிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் மலேசியா, மேற்கொண்ட முயற்சிகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவிற்கு வந்துள்ளது.
மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய எல்லைகளில் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் அதிக அளவில் புலம் பெயர்ந்து வருகின்றனர். கடத்தல்காரர்களின் படகுகளில் அவர்கள் ஆபத்தான கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் பொருட்டு மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான், வங்க தேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சக பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், மலேசியாவில் ஏற்கனவே அதிகமாக புலம் பெயர்ந்தோர் இருப்பதால், மேலும், மேலும் வருபவர்களை சேர்த்துக் கொள்ள இயலாது என்று தெரிவித்திருந்தார். இதே பதிலை வங்கதேச அமைச்சகமும் தெரிவித்ததால் சரியான உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய வெளியுறவுத் துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரோஹின்யா குடியேறிகளின் எண்ணிக்கை 45,000 தாண்டி உள்ளது. இதனால், மேலும் அகதிகளுக்கு இடமளிப்பது முடியாத காரியம் என்றே கூறப்படுகிறது. அகதிகள் விவகாரத்தில் முடிவுகளை எடுக்க வேண்டிய மியான்மர் அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருவதால், அகதிகளின் பிரச்சனை இப்போதைக்கு முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.