உலான் படோர், மே 18 – சீன பயணத்தை முடித்துக்கொண்டு மங்கோலியா சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டின் பிரதமருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், மங்கோலியாவுக்கு ரூ.6,400 கோடி கடன் வழங்குவதாக அவர் அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சீன சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று மங்கோலியா நாட்டுக்கு சென்றார். தலைநகர் உலான் படோரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த நாட்டின் பிரதமர் சைக்கான்பிளக்குடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எல்லை பாதுகாப்பு, போலீஸ், விமான சேவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “மங்கோலியாவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாட்டுக்கு வந்துள்ள முதல் இந்திய பிரதமர் நான் என்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்”.
“மங்கோலியாவில் ஜனநாயகம் மலர்ந்து 25 ஆண்டுகள், இந்திய-மங்கோலிய ராஜ்ய உறவு மலர்ந்து 60 ஆண்டுகள் என்ற இரு மைல் கல்கள் எட்டப்பட்டுள்ள நிலையில், நான் இங்கு வந்திருப்பதை சிறப்புரிமையாக கருதுகிறேன்”.
“மங்கோலியா, இந்தியாவின் கிழக்கு கொள்கை திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகி இருக்கிறது. இந்த பகுதியில் சமாதானம், ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல நாம் ஒருங்கிணைந்து உழைப்போம்”.
“நமது உறவின் ஆழத்தை, இப்போது கையெழுத்திட்ட இரு தரப்பு ஒப்பந்தங்கள் எடுத்துக்காட்டும். இதில் பொருளாதார உறவுகள், வளர்ச்சியில் கூட்டு, ராணுவம், இரு தரப்பு மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவை அடங்கும்”.
“நாம் இரு தரப்பு பொருளாதார உறவினை புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்வோம். மங்கோலியாவின் பொருளாதார திறனை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 ஆயிரத்து 400 கோடி) கடனாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என மோடி கூறினார்.