கோலாலம்பூர், மே 18 – கடல் வழி மார்க்கமாக கள்ளத் தோணிகளில் அழைத்து வரப்பட்டு, நடுகடலில் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ரோஹின்யா குடிமக்களை, மலேசியா ஏற்றுக்கொள்ள மறுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடன் காசிம், மலேசியாவின் குடியேற்ற சட்டவிதிமுறைகளை மீறி, முறையான கடப்பு ஆவணங்கள் இல்லாதவர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
“அது போன்ற மக்களுக்கு ‘உணவு மற்றும் எண்ணெய்’ கொடுத்து உதவ முடியுமே தவிர சட்டவிதிமுறைகளை மீறி அவர்களை அவ்வளவு எளிதாக நாட்டிற்குள் அனுமதித்து விடமுடியாது” என்று ஷாஹிடன் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனை குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த துணைப்பிரதமர் மொகிதின் யாசின், ரோஹின்யாக்களின் பிரச்சனைகளை மியான்மார் தான் தீர்க்க வேண்டும். அதை விடுத்து அண்டை நாடுகளிடம் அவர்களை சரணடைய வைக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மியான்மார் நாட்டில் நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் வன்செயல்களுக்கும் பயந்து அந்நாட்டில் வசிக்கும் ரோஹின்யா இன மக்கள் அண்டை நாடுகளுக்கு கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அம்மக்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதைத் தடுத்து மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் அவர்களை மியான்மாருக்கே திருப்பி அனுப்பிவிடுகின்றன.
இப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் சுமார் 8,000 பேர் வரை கடலில் சிக்கித் தத்தளிப்பதாக கூறப்படுகின்றது.