மும்பை, மே 19 – பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களாக சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடிய இந்திய தாதி ஒருவர் நேற்று மரணமடைந்தார். 1973-ல் இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தின் கடைசி உயிர்ப் போராட்டமும் நேற்றுடன் முடிவடைந்தது.
1973-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் பணியில் இருந்த 23 வயது தாதியான அருணா ஷான்பாக், சக ஊழியர் சோகன் லால் பார்த்தா வால்மீகி என்பவனால் மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மிருகத்தனமாக நடந்து கொண்ட சோகன் லால், நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை இறுக்கி உள்ளான். இதில் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு, அருணா சுயநினைவை இழந்தார். 11 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட அருணாவிற்கு அதே மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், மூளை கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவருக்கு நினைவு திரும்பவே இல்லை. அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் படி எழுத்தாளர் பிங்கி விரானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும், அது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், அருணாவிற்கு கடந்த வாரம் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. எனினும் அவரது உயிர் நேற்று பிரிந்தது. 42 வருடங்களாக உயிருக்கு போராடிய அருணா நேற்று இறந்ததால், கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் கூடினர்.
இவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளி சோகன் லாலுக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தண்டனைக் காலம் முடிந்து வெளியான அவன் பற்றி வேறு எந்த தகவல்களும் இல்லை.