வாஷிங்டன், மே 19 – 6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா டுவிட்டரில் சொந்தக்கணக்கு துவங்கி உள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் டுவிட்டரில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் இன்று இணைந்துள்ளார்.
ஏராளமான அரசியல் பிரபலங்கள் இணைந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். டுவிட்டரில் சேர்ந்த 45 நிமிடத்திற்குள்ளாகவே 2 லட்சத்து 17 ஆயிரம் ஆதரவாளர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் தகவல் தொடர்பிற்கு டுவிட்டரை பயன்படுத்தி வந்தது. ஆனால் அதிபர் ஒபாமா டுவிட்டரில் இணையாமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், ‘அதிபர் ஒபாமா’ (president Obama) என்ற பெயரில் அதிபர் ஒபாமா சொந்தமாக டுவிட்டர் கணக்கு துவங்கியுள்ளார். இந்த புதிய டுவிட்டர் கணக்கு மூலமாக அமெரிக்க மக்களுடன் அவர் நேரடியாக உரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டரின் புகைப்படமாக அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்ற செல்மா சிவில் உரிமைகள் பேரணியின் 50-வது ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படத்தை அவர் வைத்துள்ளார்.
தன்னுடைய முதல் டுவீட்டில் ‘ஹலோ ட்விட்டர்! இது பாரக்’. ‘உண்மையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் எனக்கு சொந்தமாக கணக்கு கொடுத்திருக்கிறார்கள்’ என்று நகைச்சுவையாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய இடத்தில் அப்பா கணவன் மற்றும் அமெரிக்காவின் 44-வது அதிபர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர்கள் எச்.டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் போன்றோர் டுவிட்டரில் ஒபாமாவை பின் தொடர்ந்துள்ளனர். வருகிற அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஹிலாரி கிளிண்டன் மட்டும் அவரை பின் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.