புத்ராஜெயா, மே 19 – அரசு மீதான தனது அதிருப்தி குறித்தும், நாடாளுமன்ற சபாநாயகராக தாம் நடத்தப்படும் விதம் குறித்தும் தன்னை சந்தித்த போது டான்ஸ்ரீ பண்டிகார் விவரித்ததாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகராக தன்னை நாடாளுமன்றம் நடத்தும் விதம் அதிருப்தி அளிப்பதால் பதவி
விலகப் போவதாக தன்னிடம் பண்டிகார் கூறியதை மட்டுமே தாம் வெளியிட்டதாக
அவர் மேலும் கூறியுள்ளார்.
“பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது அதிருப்தி கொண்டிருப்பதாகவும், அதனால்
பதவி விலக விரும்புவதாகவும் அவர் (பண்டிகார்) கூறினார். அடுத்து என்ன
செய்ய வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டபோது, பதவி விலக விரும்பினால்
அதன்படி செய்யுங்கள் என்றேன். ஆனால் இப்போது நான் பொய் சொன்னதைப் போல்
பேசிக் கொண்டிருக்கிறார்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார் மகாதீர்.
பண்டிகார் தான் தன்னை நேரில் சந்திக்க வந்ததாக குறிப்பிட்ட அவர், அப்போது
பண்டிகாரே தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகருக்கான அறையில் போதுமான வசதிகள்
இல்லை என பண்டிகார் தம்மிடம் கூறியதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.
இப்போது நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கான அறை புதுப்பிக்கப்பட்டதால்
பதவியில் நீடிக்க பண்டிகார் முடிவு செய்திருக்கக் கூடும் என்றார்
மகாதீர்.
நான் அப்படி சொல்லவே இல்லை
மகாதீர் கூறுவதை டான்ஸ்ரீ பண்டிகார் முற்றிலும் மறுத்து வருகின்றார். நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக துன் மகாதீரிடம் தாம் ஒரு போதும் தெரிவிக்கவில்லை என்று கடந்த வாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சில நாடாளுமன்ற அமர்வுகளின் போது முக்கியமான விவகாரங்கள்
புறக்கணிக்கப்பட்டு சின்ன சின்ன விவகாரங்கள் பெரிதாக விவாதிக்கப்படுவதாகவும்,
அது தொடர்பில் தனது விரக்தியை மட்டும் முன்னாள் பிரதமருடன் பகிர்ந்து
கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பண்டிகார் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.