Home இந்தியா ஜெயலலிதா மே 23இல் முதல்வராகப் பதவியேற்கலாம்!

ஜெயலலிதா மே 23இல் முதல்வராகப் பதவியேற்கலாம்!

619
0
SHARE
Ad

சென்னை, மே 19 – சுழல்கின்ற காலச்சக்கரம் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் உண்மையிலேயே சுவாரசியங்கள் நிறைந்தவைதான்.

சில மாதங்களுக்கு முன்னால்,அவருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீடு விசாரணைக்கு வராத சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியையும், சட்டமன்ற பதவியையும் இழந்தார்.

அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியை ஜெயலலிதா வாழ்நாளில் மறக்கவே மாட்டார். காரணம், தண்டனை மீது இடைக்காலத் தடை கிடைக்காமல், அவர் உடனடியாக பெங்களூரில் சிறைக்குச் செல்ல நேர்ந்தது ஒரு வகையான சோகம் என்றால், சில சிக்கல்களினால் அடுத்த சில நாட்களும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் கழிக்க நேர்ந்தது இன்னொரு வகையான சோகம்.

#TamilSchoolmychoice

அவரது அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்தது என்றும், இனி எப்போதும் அவர் முதல்வராக முடியாது என்றும் எகத்தாளமாக அறிக்கை விட்ட அரசியல் எதிரிகள் ஒரு புறம். அவரது வாழ்க்கையில் நடந்த தலைகீழ் மாற்றங்களை சோதிட ரீதியாக கணித்துப் பலன் கூறிக் கொண்டிருந்தவர்கள் இன்னொரு புறம்.

இந்நிலையில் அதிரடியாக எல்லாமே மீண்டும் தலைகீழ் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.

மீண்டும் தமிழக முதல்வராக எட்டு மாத இடைவெளிக்குப் பின் மே 23ஆம் தேதி ஜெயலலிதா பதவியேற்பார் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, வருகிற 22-ந் தேதி பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பார் என்று அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

வழக்கமாக முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்னால் இதுபோன்று செய்வது வழக்கம் என்பதால், வரும் 23-ந் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பார் என்று தெரிகிறது.

ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது முதல் அவரது போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு ஜெயலலிதா வெளியே வரவில்லை.

Jayalalitha after winning 2011 Tamil Nadu State Elections

கடந்த 2011இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய பின்னர் மே 13, 2011ஆம் நாள் வீட்டிலிருந்து வெளியே வந்து ஆதரவாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா…

அவரது விடுதலைக்காக, வாழ்த்து சொல்வதற்காக போயஸ் கார்டனில் அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். ஆனால் ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை.

இந்த சூழலில்தான் எதிர்வரும் மே 22-ந் தேதி காலை 7 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே கவர்னரிடம் ஜெயலலிதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனை தொடர்ந்து வருகிற மறுநாள் 23-ந் தேதி பகல் 11 மணியளவில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்றும் தமிழக ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.

படம்: EPA