கொழும்பு, மே 20 – இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுடன், தேசிய அளவில் சமரச நடவடிக்கைக்கு என் அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
புனரமைப்பு வசதிகளைக் செய்து தருவதைக் காட்டிலும், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதை தேற்றி, ஆற்றுப்படுத்துவதே மிகவும் முக்கியம் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உருக்கமாகப் பேசியுள்ளார்.
இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிகட்ட போர் முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் நினைவாக ‘போர் நாயகர்கள் தினம்’ கொழும்பு நகரின் தெற்கே அமைந்துள்ள மாத்தரை நகரில் நேற்று கொண்டாடப்பட்டது.
அப்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் வண்ணமயமான அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிபர் சிறீசேனா ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சேர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டார்.
அதன் பின்பு சிறீசேனா பேசியதாவது: “சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையே தேசிய அளவில் சமரசமும், நல்லிணக்கமும் நம்பிக்கையும் ஏற்படுத்துவது, அனைத்து சமூகத்தினருக்கும் உரிய மரியாதை அளிப்பதே என அரசின் நோக்கமாகும்”.
“விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது ராஜபக்சே அரசு செய்த செயல்களை சாதனையாக எடுத்து மகிழ்ச்சி கொள்ள முடியாது. ராஜபக்சே அரசு சிறுபான்மை தமிழர்களின் மனதை வெல்வதில் தோல்வி அடைந்துவிட்டது”.
“போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனரமைப்பு, மறுவாழ்வு வசதிகளை அளிப்பதைக் காட்டிலும், தமிழர்களின் மனதையும், நன்மதிப்பையும் பெறுவதே முக்கியம்”.
“போரை முடிவுக்கு கொண்டுவருவதில் முப்படைகளும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதோ அதே போல, சிங்கள மற்றும் தமிழர்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்படவும் பங்களிப்புச் செய்ய வேண்டும்”.
“என்னுடைய அரசு ராணுவத்தினருக்கு உரிய மதிப்பை வழங்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்கும். தாய்நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கையை வைத்துள்ளேன்”.
“அரசுக்கு எதிராக பரவிவரும் தவறான பரப்புரைகளை நான் மறுக்கிறேன். இலங்கை மண்ணில் மீண்டும் விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல்கள் தலைதூக்குவதை ஒருபோதும் என் அரசு அனுமதிக்காது” என அவர் தெரிவித்தார்.