கொழும்பு, மே 21 – இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் காலக்கெடுவை மீறாத வகையில் இந்த விசாரணை தொடங்க உள்ளது.
இதுகுறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணையை அடுத்த மாதம் தொடங்க உள்ளோம். இலங்கை சட்டங்களின்படி இந்த விசாரணை நடைபெறும்”.
“இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலை வரவேற்கிறோம். குற்றவாளிகள் மீது உள்ளூர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் வீழ்ச்சியை தொடர்ந்து, மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான அரசு பதவியேற்றது. இத்தேர்தலுக்கு முன் சிறிசேனா அளித்து வாக்குறுதியில்,
“இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் காலத்தில் ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை உத்தரவுக்கு மாறாக, நம்பகத்தன்மை வாய்ந்த உள்நாட்டு விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அந்நாடு ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 3 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முந்தைய அதிபர் ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இதனை ராஜபக்சே ஏற்காததால் அனைத்துலக சமூகத்தின் கண்டனத்துக்கு அவர் ஆளானார். இந்நிலையில் உள்நாட்டு விசாரணையை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி இலங்கை விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. மனித உரிமை ஆணையம் தனது தீர்மானத்தை கடந்த பிப்ரவரியில் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.