சென்னை, மே 25 – இசையமைப்பாளர் இளையராஜா தனது புகழ், பெயர் மற்றும் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ஐந்து இசைத்தட்டு விற்பனை நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளார்.
இது குறித்து இளையராஜா கூறியதாவது; “என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”.
“தான் இசையமைத்த பாடல்களைத் தன்னுடைய உரிமை இல்லாமல் குறுந்தட்டு மூலம் விற்பனை செய்வதைத் தடை செய்யக் கோரியும், அதை விற்பனை செய்யும் இசைத் தட்டு விற்பனை நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து, தடை விதிக்கும் மனுவும் பெற்றுள்ளேன்”
“மேலும், தன்னுடைய பாடல்களுக்குக் கிடைக்கும் காப்புரிமையைப் பராமரிக்கும் மற்றும் விநியோகிக்கும் உரிமையைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்கியுள்ளேன்”.
“இந்நிலையில், இது குறித்து கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சில இசைத் தட்டு விற்பனை நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் மூலம் தெரிந்து கொண்டோம்”.
“என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் நபர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அவர்களின் உரிய இழப்பீடும் நீதிமன்றம் மூலமாகப் பெறப்படும்” என்று இளையராஜா தெரிவித்தார்.