ஆந்திரா, மே 26 – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று நடிகை ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுயில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை ரோஜா. இவர் சென்னை மத்திய இரயில் நிலையத்தில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகத்திற்கு சென்று, பொது மேலாளர் அசோக்சிங்காலை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், சென்னையில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நகரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோல் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களையும் நகரியில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், சென்னையில் இருந்து திருத்தணி வரை மின்சார ரயில் இயக்கப்படுகின்றன. அந்த ரெயிலை புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
அப்போது நடிகையும், சட்ட மன்ற உறுப்பினருமான ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “சொத்துக்குவிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவ்வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்”.
“இதனையடுத்து, தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்று இருப்பது எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக தமிழக மக்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்கின்றனர். இந்நிலையில், கர்நாடக அரசு இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது” என்றார்.