கோலாலம்பூர், மே27- பெர்லிஸ் மாநிலத்தில், அனைத்துலக மனிதக் கடத்தல் கும்பல்களால் கொன்று புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருப்பது பேரதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. இத்தகைய குற்றச்செயல்களில் வனத்துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வனத்துறை அதிகாரிகள் உள்ளூரில் உள்ளவர்களுடன் மட்டுமில்லாமல், தாய்லாந்து,மியான்மார்,வங்காள தேசம் உட்பட அனைத்துலகக் கடத்தல் கும்பல்களுடனும் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமத் ஜாஹித் ஹமிதி கூறியுள்ளார்.
மேலும், “தனது அமைச்சில் உள்ளவர்கள் இத்தகைய குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, பெரிய அளவில் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாய்லாந்து எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, பெர்லிஸ் காவல்துறைத் தலைவர் ஷாபி இஸ்மாயில் கூறியதாவது: “திங்கட்கிழமை ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதுவரை எந்தவொரு சடலமும் மீட்கப்படவில்லை.எனினும்,புதைகுழிகளில் மேலும் சடலங்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தத் தேடும் நடவடிக்கையும் புலன்விசாரணையும் எப்போது முடியும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. இந்த விவகாரம் குறித்து யாரும் ஆருடங்கள் கூற வேண்டாம்;புலன் விசாரணை நடத்த வழி விடுங்கள்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.