லண்டன், மே 27 – சிரியாவில் கடந்த 4 ஆண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சிரியாவில் கடந்த 4 ஆண்டாக அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தற்போது ஐஎஸ் என்ற அமைப்பின் கீழ் இந்தப் போராட்டம் முன்னின்று நடத்தப்பட்டு வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளைக் கைப்பற்றி இஸ்லாமிய அரசை நிறுவியுள்ளனர்.
அண்மைக்காலமாக இவர்களது கை ஓங்கி வருகிறது. ஈராக்கில் ரமாடி நகரையும், சிரியாவில் பாமிரா நகரையும் கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். பாமிரா நகரை மீண்டும் கைப்பற்ற, சிரியா போர் விமானங்கள் ஐஎஸ் முகாம்கள் மீது கடந்த சில நாட்களாகக் குண்டு வீசி வருகின்றன.
இதனால் பாமிராவில் உள்ள புராதனச் சின்னங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிரியா அரசுக்கு ரஷ்யா ஆயுத உதவியும் நிதி உதவியும் அளித்து வருகிறது. இதற்கு இங்கிலாந்து உள்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சிரியா பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக ரஷ்யாவுடன் இங்கிலாந்து அரசு கடந்த காலங்களில் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் அண்மையில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இதில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கேமரூன் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆனார். இவருக்கு ரஷ்ய அதிபர் புடின் நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு தலைவர்களும் சிரியா, ஈரான் மற்றும் உக்ரைன் பிரச்சனை குறித்து விவாதித்தனர்.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: “சிரியா பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இரண்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்”.
“ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக ரஷ்யாவும், இங்கிலாந்தும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்சனையில் கடந்த பிப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தைத் தீவிரமாக அமல்படுத்த இரு நாடுகளும் முயற்சிக்கும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.