புது டெல்லி, மே 28 – இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயும் ஏற்றத்திலேயே உள்ளது. எனினும், சமீப காலமாக பெருகி வரும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற பயன்பாடுகளின் ஆதிக்கத்தினால் குறுந்தகவல் மற்றும் தொலைபேசி அழைப்புகளின் தேவைகள் பெரிய அளவில் குறைந்துவிட்டன.
இதனை கருத்தில் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையத்தின் உதவியுடன் செயல்படுத்த விரும்பும் திட்டம் தான் ‘ஜீரோ ரேடிங்’ (Zero Rating). இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட செயலிகளுக்கு இணையத்திற்கான கட்டணம் இலவசம். ஆனால் பல செயலிகளுக்கு பயனர்கள் பணம் செலுத்த நேரிடும். இணைய சமநிலைக்கு எதிரான இந்த திட்டம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதே போன்ற திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டதுதான், பேஸ்புக்கின் ‘இன்டர்நெட்.ஆர்க்’ (Internet.Org) சேவை. இதுவரை இந்தியாவில் 8 லட்சம் பேர் இந்த சேவையில் இணைந்து இருந்தாலும், இதுவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இதே ஜீரோ ரேடிங் சேவையில் களமிறங்க கூகுள் நிறுவனமும் தருணம் பார்த்து காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், பேஸ்புக் சந்தித்து வரும் எதிர்ப்புகளால் தற்சமயம் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இது தொடர்பாக கூகுள் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்றாலும், கூகுளின் ஜீரோ ரேட்டிங் திட்டத்தில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்திய நிறுவனங்கள் இது தொடர்பான தகவல்களை அவ்வபோது வெளியிட்டு வருகின்றன.
சர்ச்சைகளைத் தாண்டி இந்தியாவில் ஜீரோ ரேடிங் வர்த்தகத்தில் களமிறங்க உலக நிறுவனங்கள் போட்டி போடுவதற்கான காரணம், இந்தியா இணையம் தொடர்பான வர்த்தகங்களுக்கு பெரிய அளவிலான சந்தையாக வளர்ந்திருப்பது தான்.