Home கலை உலகம் திரைவிமர்சனம்: மாஸ் – பழைய கதை தான் ஆனால் புதிய வடிவில்!

திரைவிமர்சனம்: மாஸ் – பழைய கதை தான் ஆனால் புதிய வடிவில்!

808
0
SHARE
Ad

masss-movie-new-stills-01கோலாலம்பூர், மே 29 – கார்த்தியை வைத்து எடுத்த ‘பிரியாணி’ அவ்வளவு ருசிக்காமல் போனதால், அடுத்ததாக அவரது அண்ணன் சூர்யாவை வைத்து இரண்டு ஆண்டுகள் உழைப்பில் ‘மாஸ் என்ற மாசிலாமணி’யை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

தமிழ் சினிமாவுக்கு இது பேய் பட சீஸன் என்பதால், இவரும் அந்த சீஸனுக்கு ஏற்ப கதையை எழுதி, வித்தியாசமாக பேயைக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

சூர்யாவுக்கும் இது புதிய முயற்சி என்பதால், எல்லாம் சேர்ந்து ஓகே ஆக, வெங்கட்பிரபு, யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் இதோ மாஸ் பரபரப்பாக வெளியாகிவிட்டது.

#TamilSchoolmychoice

கதைச் சுருக்கம்

????????????????????????????????????????????

நண்பர்களான மாஸ் என்ற மாசிலாமணியும் (சூர்யா), ஜெட்டும் (பிரேம்ஜி) கூட்டுக் களவாணிகள். அதாவது ஒன்றாக சேர்ந்து திட்டம் தீட்டி எங்காவது ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அவர்களின் தொழில்.

ஒரு விபத்தில், சூர்யாவுக்கு ஆவிகளைப் பார்த்துப் பேசும் அதிசய சக்தி வந்துவிடுகின்றது. அந்த சக்தியின் மூலமாக அவர் இறந்து போன தன் அப்பாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தனது குடும்பத்தின் சோகப் பின்னணி தெரிய வர, அதன் பின்னர் சூர்யா செய்யும் அட்டகாசங்கள் தான் மாஸ்..

பழைய பழிவாங்கும் பேய் கதை தான், ஆனால் சூர்யா நடிக்க புதிய வடிவில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நடிப்பு

Nayanthara

மாசிலாமணியாக சென்னைத் தமிழ் பேசிக் கொண்டும், சக்தியாக இலங்கைத் தமிழ் பேசிக் கொண்டும் இரண்டு கதாப்பாத்திரங்களில் வழக்கம் போல கலக்கியிருக்கிறார் சூர்யா.

உண்மையில், படத்தில் மாஸ் என்றால், அது சக்தி கதாப்பாத்திரம் அறிமுகமான பிறகு தான். லேசான குடுமியோடும், வசீகரிக்கும் பார்வையோடும் சக்தியாக நெஞ்சைத் தொடுகின்றார்.

ஆனால் சூர்யா பேசும் இலங்கைத் தமிழ் தான் ஏனோ உறுத்துகின்றது. மெனக்கெட்டு ஓரளவு பேச முயற்சி செய்திருந்தாலும், கதாப்பாத்திரத்துடன் முழுவதுமாக ஒன்ற முடியவில்லை.

கதாநாயகியாக நயன்தாரா.. படத்தில் இருந்தாரா? என்று கேட்கும் அளவிற்கு காட்சிகள் குறைவு. இன்னொரு கதாநாயகியாக பிரணித்தா வந்த அளவிற்கு கூட நயன்தாராவிற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. ஏதோ வந்து போகிறார்.

ஆனால் ஹீரோயினுக்குப் பதிலாக சூர்யாவுடன் படம் முழுவதும் வருகிறார் பிரேம்ஜி.. “உயிரோட இருக்கும் போது எவ்வளவு ப்ரெயின் (brain) இருக்கோ செத்த பிறகும் அவ்வளவு தான் இருக்கும்” என பல காட்சிகளில் இம்முறை சிரிக்க வைத்திருக்கிறார்.

அடுத்ததாக, பார்த்திபன்.. வழக்கமான ‘குண்டக்க மண்டக்க’ வசனங்களுடன், போலீஸ் கதாப்பாத்திரம் செய்திருக்கிறார். (போலீஸ் சட்டைய “இன்” பண்ணவே மாட்டீங்களா?)

வில்லனாக சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ஷரத் லோகிதாஸ்வா, ரியாஸ் கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

“சாவுன்னா எனக்குப் புடிக்காது.. என் சாவுக்கு நானே போக மாட்டேன்” என்று சமுத்திரக்கனி வசனங்களால் கவர்கிறார்.

பேய் படத்திற்கென்றே குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்களாக அண்மைய காலமாக தொடர்ந்து பேய் படங்களில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன், கருணாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் இப்படத்தில் பேயாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் இசை

bg3

சென்னை, கனடா, கேரளா, ஊட்டி ஆகிய இடங்களில் ராஜசேகர் ஒளிப்பதிவில் காட்சிகள் பதிவு அழகு.

கார் சேசிங் காட்சிகள், ஆவிகள் மறையும் காட்சிகளில் ஆகியவற்றின் கிராபிக்ஸ் வேலைபாடுகள் ரசிக்க வைக்கின்றன.

பாடல்களில் நான் அவள் இல்லை, பூச்சாண்டி, பிறவி போன்றவை ரசிக்கும் ரகம்.

திரைக்கதை

Masss-Movie-New-Exclusive-stills-At-Suriyaourhero

ஆங்காங்கே முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே வந்து  ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்த விதத்தில் திரைக்கதை ஓகே..

“அப்படி என்ன அவசரம் .. ஏன் இந்த பிள்ளைய அநாதையா விட்டுட்டு செத்த?” என தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுப்பது போன்ற வசனங்கள், கண்தானம் செய்வதை ஊக்குவிப்பது போன்ற சமூக நல விசயங்களை முந்தைய படங்களின் காட்சிளுடன் இணைத்து கூறிய ஐடியா பக்கா..

ஆனால், பேயாக இருப்பவர்கள் சூர்யாவின் உதவியை நாடுவதற்குக் காரணம் அவர்களால் எந்த பொருட்களையும் தூக்க முடியாது. அதனால் கடைசி ஆசையை ஒரு மனிதன் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதாக ஆரம்பத்தில் காரணம் கூறிவிட்டு, பின் பாதி கதையில் அவர்களின் மூலமாகவே கண்ணாடியில் நம்பர் எழுதுவது, டேபிளை அங்கும் இங்கும் நகர்த்துவது, கிரேனை இயக்குவது என்று கதையில் அவ்வளவு லாஜிக் தவறுகள்..

அப்பாவாக வரும் சூர்யா, தனக்கு நேர்ந்த சோகக் கதையை நேரடியாக சொல்லி சூர்யாவை தன் வழிக்கு கொண்டு வந்திருக்கலாமே, அதை விட்டு ஏன் ரியாஸ்கான் சொல்லும் வரை காத்திருக்க வேண்டும்.

திடீரென சூர்யாவுக்கு அந்த சக்தி போய்விடுவது, பார்த்திபன் தலையில் அடிபட்டவுடன் அவருக்கு திடீரென அந்த சக்தி வந்துபோவது என தேவையில்லாமல் காட்சிகளை திணித்திருக்கிறார் வெங்கட்பிரபு.

வணக்கம் போட்டாச்சு சரி.. படம் முடிந்துவிட்டது வெளியே வரலாம் என்று பார்த்தால், திடீரென ‘பல வருடங்களுக்குப் பிறகு’ என்று அங்கு ஒரு 5 நிமிடக் காட்சியை ஓட்டியிருக்கிறார். ஷப்பா.. முடியல…

சரி.. விசயத்துக்கு வருவோம்.. படம் பார்க்கலாமா? என்று கேட்டால், தாராளமாகப் பார்க்கலாம்.. பிரியாணியை விட மாஸ் சுவாரஸ்யமா தான் இருக்கு..

– ஃபீனிக்ஸ்தாசன்