Home நாடு தமிழ்ப் பள்ளியில் மதுபானம் ஊடுருவல்-பெற்றோர் காட்டம்!

தமிழ்ப் பள்ளியில் மதுபானம் ஊடுருவல்-பெற்றோர் காட்டம்!

508
0
SHARE
Ad

schoolஉலுத்திராம்,மே 29- உலுத்திராம் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் உணவுக் கூடத்தில் மதுபானப் புழக்கம் இருந்ததாக முகநூலில் பரபரப்பாகச் செய்தி பரவத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து,இந்தப் பிரச்சனை மாநிலக் கல்வி இலாகாவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்ப் பள்ளிக்குள் மதுபானம் புகுந்தது எப்படி என்ற கேள்விக்குத்  தலைமை ஆசிரியர் அளித்த விளக்கம் பின்வருமாறு:

#TamilSchoolmychoice

“இரு தினங்களுக்கு முன்பு ஒரு பொழுது போக்கு விடுதிப்(club) பொறுப்பாளர்கள் பிறந்த நாள் விழாவிற்காகப் பள்ளியின் உணவுக்கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டார்கள்.

அந்த இயக்கம் பள்ளிக்கு நிறைய உதவிகள் செய்துள்ளதால் அனுமதி அளித்தேன்.ஆனால்,அவர்கள் பள்ளிக்குள் பீர் போத்தல்களைக் கொண்டு வருவார்கள் என  நான்   எதிர்பார்க்கவில்லை.

இச்செயலுக்காக அவர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.நானும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன்”என்றார்.

இவ்விவகாரம் தொடர்பாகப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ப.சுகுமாரன் கூறியதாவது:

“இந்த விசயத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சாதாரணமாக இருந்து விட முடியாது.பெற்றோருக்கு உண்மையான நிலவரம் தெரிய வேண்டும் என்கிற நோக்கில் காவல்துறையில் இச்சம்பவம் குறித்துப் புகார் செய்திருப்பதோடு கல்வி இலாகாவிலும் புகார் செய்திருக்கிறோம் ” என்றார்.

இது குறித்துப் பெற்றோரிடம் கருத்து  கேட்ட போது: மது பானங்களைப் பள்ளிக்குள் நுழைய விடக் கூடாது என்று அரசாங்கமும் அரசு சார்பற்ற இயக்கங்களும் பெரும் முயற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த நிகழ்வு வருத்தம் அளிப்பதாக உள்ளது.அன்றைய மதுபான விருந்தின் போது பெரும்பாலான சீனர்களும் பள்ளிக்குச் சம்பந்தமில்லாதவர்களும் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்தப் பொழுது போக்கு விடுதியில் பெரும்பாலான சீனர்கள் தான் உறுப்பினர்களாக உள்ளனர்.அவர்கள் நினைத்திருந்தால் சீனப் பள்ளியிலுள்ள உணவு விடுதியில் இந்த விருந்தினை வைத்திருந்திருக்கலாம்.

ஆனால்,சீனப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இத்தகைய நடவடிக்கைக்குத் துணை போகவில்லை.அப்படி இருக்கும் போது, தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துணை போயிருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றனர்.

பெற்றோர்கள் கேட்கும் கேள்வி நியாயமானது தானே? ஆசிரியர்களே!பொது மக்களே!சிந்தியுங்கள்.நமது கேளிக்கைகளுக்குப் பள்ளி தானா இடம்?