ஆசிய அகதிகளின் பிரச்சனை தொடர்பாக 17 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அன்னே சி. ரிச்சர்ட், “தெற்காசிய கடல் பகுதியில் தத்தளித்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை உடனடியாக மீட்பதில் அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்கு தாய்லாந்தின் அனுமதி அவசியம்” என்று தெரிவித்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்ற தாய்லாந்து துணைப் பிரதமர் தனாசக், “அமெரிக்க கண்காணிப்பு விமானங்கள், எங்கள் கடல் பகுதியில் அகதிகளை கண்டுபிடித்து மீட்க நாங்கள் அனுமதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தாய்லாந்து கடல் பகுதியில் தத்தளிக்கும் 600-க்கும் மேலான அகதிகளை கண்டறிந்து மீட்கும் முயற்சியில் உடனடியாக இறங்கி உள்ளது.