சென்னை, மே 30 – வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாசு என்கிற மாசிலாமணி படம் வெற்றி பெற்றதா தோல்வி அடைந்ததா என்பது போன்ற விவாதங்களைத் தாண்டி அந்த படத்தின் இயக்குனரை புதிய சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. இந்த சர்ச்சை படத்திற்காக அல்ல படத்தில் இடம்பெறும் விஜய் அஜித் படங்களின் பெயர்கள் மற்றும் பின்னணி இசைக்காக.
படத்தில் காவல் துறை அதிகாரியாக சூர்யா அறிமுகமாகும் காட்சியில் தன் பெயரை ஜெகதீஷ் என்று கூறுவார். ஜெகதீஷ் என்ற பெயர் துப்பாக்கி படத்தில் விஜய்யின் பெயராகும். மற்றொரு காட்சியில் சூர்யா பிரேம்ஜியை மாணிக்க விநாயகம் என்று அழைப்பார். அதற்கு பிரேம்ஜி நான் விநாயக் மகாதேவ் என்று மங்காத்தா அஜித்தின் பெயரை கூறுவார். படத்தின் நாயகனுக்கு விஜய்யின் பெயரையும், நகைச்சுவை நடிகருக்கு அஜித்தின் பெயரையும் வைக்கப்பட்டிற்கும் ஆரம்பக் காட்சியே ரசிகர்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
போதாக்குறைக்கு, சூர்யா பேருந்து ஒன்றில் கத்தியை எடுக்கும் போது, விஜய்யின் கத்தி பட பின்னணி இசை பயன்படுத்தப்பட்டு இருக்கும். அந்தக் காட்சியில் சூர்யாவிற்கு கிடைத்த கைதட்டலை விட அந்த தீம் இசைக்கு தான் அதிக கைதட்டல் கிடைத்தது. எப்படியும் மற்றொரு காட்சியில் வெங்கட்பிரபு அஜித்தை பெருமைப்படுத்தும் விதமாக ஏதேனும் ஒரு காட்சி வைத்திருப்பார் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
அதற்கு ஏற்றார் போல் வீரம் படத்தின் தீம் இசை ஒலிக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் இந்த பின்னணி இசை யாருக்காக இருக்கும் என ஒரு சில நொடிகள் ஆவலுடன் காத்திருக்கையில், அந்த இசை நகைச்சுவை நடிகர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டதும் திரை அரங்கில் விசில் சத்தம் பறந்தது. இந்த விசில் சத்தம் இம்முறையும் விஜய் ரசிகர்களிடமிருந்து தான். அஜித் ரசிகர்கள் பலர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். திரை அரங்கிலேயே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக வெங்கட்பிரபுவைக் கொண்டாடும் அஜித் ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரை திட்டித் தீர்த்துள்ளனர். விஜய் பட வாய்ப்பிற்காக அஜித்தை அவமானப்படுத்துவதா என பலர் அவரின் வலைப்பக்கத்தில் கேள்வியும் எழுப்பி உள்ளனர். தன் படங்களில் வழக்கமாக பிரபலங்களின் வசனங்களை பயன்படுத்தி கைதட்டல் பெறும் வெங்கட்பிரபு, தற்போது அதே செய்கையால் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.