சிங்கப்பூர், மே 30 – இன்று சிங்கப்பூரில் தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பான முறையில் திறப்பு விழா கண்டது. இந்த மாநாடு சிங்கை சிம் பல்கலைக்கழகத்தில் சிங்கை பிரதமர் துறையின், இரண்டாம் அமைச்சரும், உள்துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் (படம்) அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது.
இன்று, மின்னிலக்கக் கட்டமைப்பு வழி தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு நமது பழமை வாய்ந்த தமிழ்மொழியை ஊழிக்காலத்திற்கும் நிலைத்திருக்கச் செய்யும் வண்ணம், ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் உலகளாவிய தமிழ் சமூகத்தினரிடையே, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் உத்தமம் ஒரு சான்றாக விளங்குகிறது அமைச்சர் தனது தொடக்க உரையில் கூறினார்.
இன்று முதல் நாள் மாநாடு சிறப்பான முறையில் திறப்பு விழா கண்டு, தொடர்ந்து மாநாட்டில் கட்டுரைகள் கடைக்கப்பட்டதோடு, விவாதங்களும் நடைபெற்றன.
கட்டுரை படைத்த வே.இளஞ்செழியன்
“இலக்கியம் கற்பித்தலில் முகநூல் பயன்பாடு : மாணவர்களின் ஈடுபாடும் உயர்நிலைச் சிந்தனை வளர்ச்சியும்” எனும் ஆய்வு கட்டுரையை மலேசியப் பேராளர் முனைவர் அருள்நாதன் விசுவாசம் சிறப்பாகப் படைத்தார்.
அதைத் தொடர்ந்து, 21-ஆம் நூற்றாண்டில் ஆசிரிய மாணவர்களுக்கான தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் திறன்பேசி வழி புதிய பரிணாமங்கள் எனும் ஆய்வினை விரிவுரைஞர் புஷ்பவள்ளி அ.ரெங்கசாமி மாநாட்டில் படைத்தார்.
மின்னூல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையை, விரிவுரைஞர் சிவகுமாரி “மின்னூல் வழி மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்துதல்” எனும் தலைப்பில் படைத்தார்.
மாநாட்டில் கட்டுரை படைத்த இல.வாசுதேவன் (வலது)
அவரைத் தொடர்ந்து ஆசிரியர் இல.வாசுதேவன், “21-ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்களில் அட்டைக் கணினி வழி தமிழ் மின்னூல் உருவாக்கம்: ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் கட்டுரையினைப் படைத்து சிங்கை மற்றும் உலகளாவிய ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றார்.
இன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பாக மலேசியா உத்தமம் அமைப்பின் தலைவர் சி.ம. இளந்தமிழும், தமிழா குழுமத்தின் தன்னார்வாளருமான இளஞ்செழியனும் இணைந்து “கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத் திருத்தியும் இலக்கணப் பிழைத்திருத்தியும்: வளர்ச்சியும் சவால்களும்” எனும் தலைப்பில் தமிழ்க் கணிஞர்களைப் பெரிதும் கவர்ந்தனர் என்றால் அது மிகையாகாது.
மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் உத்தமம் மலேசியக் கிளையின் தலைவர் சி.ம.இளந்தமிழ்
-மாநாட்டுத் தகவல்கள் , படங்கள் உதவி : மலேசியப் பேராளர் தனேஷ் பாலகிருஷ்ணன்